பரமஹம்ஸ யோகானந்தரின் உரைகள் மற்றும் எழுத்துக்களிலிருந்து…
இறைவன் மனித இதயங்களில் கண்ணாமூச்சி விளையாடுகிறான், இதன்மூலம் இறுதியில் உங்கள் மனித அன்பில் நீங்கள் தேடுவது அவனுடைய அன்பைத்தான் என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். உங்கள் மனித அன்பிலிருந்து இறைவனைத் தவிர்த்துவிட்டால், அன்பு மறைந்துவிடும். ஆனால் இறைவனை உங்கள் அன்றாட வாழ்க்கையில் கொண்டு வருவதன் மூலம், சாதாரண மனித அன்பு, உள்ளார்ந்திருக்கும் இறைவனின் பிரதிபிம்பத்திலிருந்து வெளிப்படும் தெய்வீக அன்பாக மாறுகிறது.
எல்லா மனிதர்களையும் மற்ற உயிரினங்களையும் தனிப்பட்ட முறையிலும் தனித்தனியாகவும் அறிந்து நேசிக்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், நீங்கள் சந்திக்க நேர்ந்த அனைத்து உயிரினங்களுக்கும் நட்புரீதியான சேவை ஒளியைப் பரப்புவதற்கு எல்லா நேரங்களிலும் தயாராக இருக்க வேண்டும். இந்த மனப்பான்மைக்கு மனதில் தொடர்ச்சியான முயற்சியும், ஆயத்தமும் தேவைப்படுகிறது; வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சுயநலமின்மை தேவைப்படுகிறது.
உறவுகளுக்கான ஆன்மீக நோக்கத்தை நாம் புரிந்துகொண்டால் – பிறருக்கான அன்பின் பரந்த வட்டங்களில் சுய அன்பின் விரிவாக்கத்தை கற்பிக்க – பின்னர் நட்பு, தாம்பத்திய அன்பு, பெற்றோர் அன்பு மற்றும் அனைத்து சக மனிதர்கள் மற்றும் அனைத்து உயிரினங்களின் அன்பு ஆகியவற்றின் வாயில்கள் வழியாக நாம் சர்வவல்லமையுள்ள, மேலான – அல்லது தெய்வீக அன்பின் ராஜ்யத்தில் நுழைய முடியும்.
இறைஅன்புடன் ஒன்றிணைந்தாலொழிய எந்த அன்பும் உண்மையான அன்பாக இருக்காது; ஏனெனில் உண்மையான அன்பு இறைவனிடமிருந்து மட்டுமே வருகிறது. மனித அன்பு, தெய்வீகமாக இருக்க, ஆழமானதாகவும் தன்னலமற்றதாகவும் இருக்க வேண்டும். இதயத்தின் அன்பு தெய்வீகமாக மாறும் வரை தூய்மைப்படுத்துங்கள்.
பயிற்சி செய்வதற்கான சங்கல்பம்: “நான் மற்றவர்களிடம் அன்பையும் நல்லெண்ணத்தையும் பரவச் செய்யும்போது, இறைவனின் அன்பு என்னிடம் வரும் பாதையைத் திறக்கிறேன். தெய்வீக அன்பு அனைத்து நன்மைகளையும் என்னிடம் ஈர்க்கும் காந்தம் ஆகும்.”
தெய்வீகஅன்பின் தன்மை மற்றும், அதை எப்படி உணர்வது மற்றும் உங்கள் வாழ்க்கையில் வெளிப்படுத்துவது என்பதை பற்றிய பரமஹம்ஸரின் மேலும் ஆழந்த உத்வேகத்தையும் வழிகாட்டலையும் கீழே உள்ள இணைப்பில் காணலாம்.