பகவான் கிருஷ்ணரும், யோகத்தின் தங்க நடுத்தரப் பாதையும் பற்றி பரமஹம்ஸ யோகானந்தர்

23 ஆகஸ்ட், 2024

அவர் அருளிய ஒரு யோகியின் சுயசரிதம் இல், பரமஹம்ஸ யோகானந்தர் “தேசங்களில் மூத்த சகோதரனான இந்தியாவினால் முயன்று பெறப்பட்ட ஞானம் அனைத்து மனிதகுலத்தின் மரபுரிமையாகும்.” என்று கூறினார்.

இந்த ஞான-மரபில் ஒரு முக்கிய நபராக, நிச்சயமாக, தீர்க்கதரிசியாகவும் அவதாரமாகவும் பகவான் கிருஷ்ணர் திகழ்கிறார். யோக விஞ்ஞானம் மற்றும் ஆன்ம-விடுதலை பற்றிய அவரது அழியாத போதனைகள் உன்னதமான பகவத் கீதையில் அனைத்து யுகங்களுக்குமாக தொகுக்கப்பட்டுள்ளன.

“கிருஷ்ணன் ஒரு தீர்க்கதரிசியாக மட்டுமல்லாமல்‌,” பரமஹம்ஸர் குறிப்பிட்டார், “அவனுடைய புனிதத்‌ தன்மையை சோதனை செய்வதற்கான அரசனுக்குரிய பொறுப்போடு இருந்த ஒரு மகானாவான். அவ‌ன் ஓர்‌ அரசனாக இருந்த போதிலும்‌, ஒரு பற்றற்ற மனிதன்‌ என்ற முறையில்‌, மிகச்‌ சிறந்த வெற்றியாளர்களில்‌ ஒருவனாவான்‌.”

ஸ்ரீ கிருஷ்ணரின் அவதார தினத்தை முன்னிட்டு (இந்து சந்திர நாட்காட்டியின்படி இந்த ஆண்டு ஆகஸ்ட் 26 ஆம் தேதி), ஸ்ரீ கிருஷ்ணர் மனிதகுலத்திற்கு கொண்டு வந்த ஊக்கமளிக்கும் செய்தி மற்றும் சமநிலை வாழ்க்கை முறையின் சாசுவத எடுத்துக்காட்டுடன் உங்களை இணைத்துக் கொள்ளவும் மேலும் அகத்தே இறைவனை உணர்வதற்கான உங்கள் உற்சாகத்தை வலுப்படுத்தவும் இந்த மாத செய்திமடலைப் நீங்கள் பயன்படுத்த முடியும் என்று நம்புகிறோம்.

பரமஹம்ஸ யோகானந்தரின் உரைகள் மற்றும் எழுத்துக்களிலிருந்து:

பகவத் கீதையிலுள்ள கிருஷ்ணனின் செய்திதான் பல கவலைகள் நிறைந்த நமது தற்கால அவசர வாழ்விற்கு மிகப்‌ பொருத்தமான கோட்பாடாக விளங்குகிறது. 

பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணன் பரிந்துரைத்த பாதை உலகின் பரபரப்பான மனிதனுக்கும் மிக உயர்ந்த ஆன்மீக ஆர்வலருக்குமான மிதமான, நடுத்தர, பொன்னான பாதையாகும். 

கீதையின் ஞானம் வறட்டு அறிவுஜீவிகள் கோட்பாட்டாளர்களின் பொழுதுபோக்கிற்காக அதன் சொற்களுடன் மன ஜிம்னாஸ்டிக்ஸ் செய்வதல்ல; மாறாக, உலகில் வாழும் ஒரு ஆணோ அல்லது பெண்ணோ, இல்லறத்தாரோ அல்லது துறவியோ, யோகத்தின் படிப்படியான முறைகளைப் பின்பற்றி, இறைவனுடன் நேரடித் தொடர்பை உள்ளடக்கிய ஒரு சமநிலை வாழ்க்கையை எவ்வாறு வாழ்வது என்பதைக் காண்பிப்பதாகும். 

கிருஷ்ணனால் அர்ஜுனனுக்கு உபதேசிக்கப்பட்ட மற்றும் கீதை அத்தியாயங்கள் IV:29 மற்றும் V:27-28ல் குறிப்பிடப்பட்டுள்ள கிரியா யோக உத்தி, தியான யோகத்தின் மிக உயர்ந்த ஆன்மீக விஞ்ஞானமாகும். லோகாயத யுகங்களில் மறைக்கப்பட்ட இந்த அழிவிலா யோகம், தற்கால மனிதனுக்காக மகாவதார் பாபாஜியால் புத்துயிர் அளிக்கப்பட்டு, யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா/ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் குருமார்களால் கற்பிக்கப்படுகிறது. 

பகவத் கீதையில் அர்ஜுனனின் குருவாகவும், ஆலோசகராகவும் ஸ்ரீ கிருஷ்ணரின் பாத்திரத்தின் மீதும், அவர் உலகிற்கு ஓர் ஆசானாக போதித்த உன்னத யோகச் செய்தியின் மீதும் நம் கவனம் செல்கிறது – தெய்வீக ஒற்றுமை மற்றும் முக்திக்கான தார்மீக ரீதியான செயல்பாடு மற்றும் தியானத்தின் வழி – அதன் ஞானம் அவரை காலங்காலமாக பக்தர்களின் இதயங்களிலும் மனங்களிலும் அமர வைத்துள்ளது. 

கிருஷ்ணரின் வாழ்க்கையானது லௌகீக வாழ்க்கையின் பொறுப்புகளிலிருந்து தப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்ற அவனது தத்துவத்தை நிரூபிக்கின்றது. இறைவன்‌ நம்மை வைத்துள்ள இந்த இடத்திற்கு அவனைக்‌ கொணர்வதால்‌ இப்பிரச்சனை தீர்க்கப்பட முடியும்‌. நமது சுற்றுச்சூழல்‌ எதுவாக இருந்தாலும்‌ சரி, எந்த மனத்தில்‌ இறைத்‌ தொடர்பு ஆட்சி செய்கின்றதோ, அதனுள்‌ சுவர்க்கம்‌ வந்தே ஆக வேண்டும்‌. 

உலகத்தைத்‌ துறத்தல்‌ அல்லது உலக வாழ்வில்‌ மூழ்குதல்‌ ஆகிய இரண்டு மிகப்‌ பெரிய படுகுழிகளைத்‌ தவிர்ப்பதற்கு, மனிதன் இடைவிடாத தியானத்தின்‌ மூலம்‌ தன் மனத்தைப் பயிற்றுவிக்க வேண்டும், இதனால் அவன் வாழ்வின் தினசரித்‌ தேவையான தனது கடமைகளைச் செய்யவும் அதே சமயம்‌ இறை உணர்வைத் தக்க வைத்துக் கொள்ளவும் முடியும். இதுவே கிருஷ்ணனின்‌ வாழ்க்கை மூலம்‌ எடுத்துக்காட்டப்படுகின்ற முன்மாதிரி ஆகும்‌. 

பகவத் கீதையிலுள்ள ஸ்ரீ கிருஷ்ணரின் செய்தி நவீன யுகத்திற்கும், எந்த யுகத்திற்கும் சரியான பதிலாகும்: கடமை ஆற்றும் யோகம், பற்றற்று இருக்கும் மற்றும் ஆன்ம அனுபூதிக்கான தியான யோகம். அகத்துள் இறை அமைதி இல்லாமல்‌ பணி செய்வது நரகமாகும்‌; ஆன்மாவில்‌ என்றும்‌ ததும்பும்‌ இறை ஆனந்தத்துடன்‌ பணி செய்வதென்பது, ஒருவர்‌ எங்கு சென்றாலும்‌ எடுத்துச்‌ செல்லக்கூடிய ஒரு சுவர்க்கத்தை ஏந்திச்‌ செல்வதற்கு ஒப்பாகும்‌. 

பரமஹம்ஸ யோகானந்தரின் அற்புதமான மொழிபெயர்ப்பு மற்றும் பகவத் கீதை விளக்கவுரை, காட் டாக்ஸ் வித் அர்ஜுனா விலிருந்து சில பகுதிகளைப் படிக்க உங்களை அழைக்கிறோம். பரமஹம்ஸர் கூறியது போல், “பிரபஞ்சத்தின் முழு அறிவும் கீதையில் பொதிந்துள்ளது. மிக ஆழமான அதே சமயம் வெளிப்படுத்தும் மொழியில் கோர்வைப்படுத்தப் பட்டுள்ள கீதை, மானுட வாழ்வின் முயற்சி மற்றும் ஆன்மீகத்திற்கான முயற்சியின் அனைத்து நிலைகளிலும் புரிந்து கொள்ளப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. 

இதைப் பகிர