செப்டம்பர் 15, 2024 அன்று, சாதனா சங்கத்தின் நிறைவு நிகழ்ச்சியின் போது நடைபெற்ற நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட சத்சங்கத்தில், யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா/ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் ன் தலைவரும் ஆன்மீக முதல்வருமான ஸ்வாமி சிதானந்த கிரி, YSS சென்னை ரிட்ரீட் YSS ஆசிரமமாக அறிவிக்கப்படும் என்றும், வரும் ஆண்டுகளில் முழுமையான ஆசிரமமாக உருவாக்கப்படும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஸ்வாமி சிதானந்தஜி அவர்களின் இந்த சிறப்பு அறிவிப்பை கீழே காணுங்கள்.
ஒரு ஆன்மீக சோலை
சென்னை நகரின் மையத்திலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த 17 ஏக்கர் ஆன்மீகச் சோலை YSS பக்தர்களுக்கு ரிட்ரீட் மையமாக 2010 இல் திறக்கப்பட்டது. ஒரு ஏரிக்கும் பாதுகாக்கப்பட்ட வனத்திற்கும் இடையில் அமைந்துள்ள இந்த இடம் அமைதி, தனிமை மற்றும் சாந்தம் நிறைந்த ஒரு சரணாலயத்தை வழங்குகிறது.
நான்கு YSS ஆசிரமங்களும் வடக்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் அமைந்துள்ளதால், தென்னிந்திய பக்தர்கள் வருவதற்கும், சன்னியாசிகளுடன் தொடர்புகொள்வதன் மூலம் பயனடையவும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருந்தது. தெற்கில் வளர்ந்து வரும் பக்தர்களின் எண்ணிக்கையைப் பூர்த்தி செய்வதற்காக (ஓரளவு தமிழ் மற்றும் தெலுங்கில் YSS பாடங்கள் வெளியிடப்பட்டதன் விளைவாக), YSS பிப்ரவரி 2024 முதல் சென்னை ரிட்ரீட் இல் தொடர்ச்சியான அடிப்படையில் சன்னியாசிகள் இருப்பிற்கு முடிவு செய்தது. இந்த தொடர்ச்சியான சன்னியாசிகளின் இருப்பானது பக்தர்களுக்கு கணிசமாக பயனளித்துள்ளது, இது ஆங்கிலம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் நடத்தப்படும் சாதனா சங்கங்கள், ரிட்ரீட் மற்றும் அவுட்ரீச் நிகழ்ச்சிகளில் பெரும் பங்கேற்புக்கு வழிவகுத்தது. இந்த முன்னேற்றத்தால் உற்சாகமடைந்த ஸ்வாமி சிதானந்தஜி இந்த ரிட்ரீட் மையம் இப்போது YSS ஆசிரமமாக மாற்றப்படும் என்று முறையாக அறிவித்தார்.
தனிப்பட்ட ரிட்ரீட் மற்றும் வரவிருக்கும் நிகழ்வுகளுக்கு எங்களுடன் இணைந்திருங்கள்
சென்னையில் உள்ள எங்கள் புதிய ஆசிரமத்திற்கு வருகை தருமாறு உங்களை அன்புடன் அழைக்கிறோம். இங்குள்ள அமைதியான இயற்கை சூழல் ஆன்மீக முன்னேற்றத்திற்கு உற்சாகமான சூழலை உருவாக்குகிறது. இங்கே, நீங்கள் ஆழ்ந்த பயிற்சியில் மூழ்கி, மாற்றம் தரும் ஆன்மீக நிகழ்ச்சிகளில் பங்கேற்று, இந்த புனித சரணாலயத்தின் அமைதியையும் சாந்தத்தையும் உணரலாம்.
இந்த பயணத்தின் அடுத்த படிகள்
முழுமையாக செயல்படும் ஆசிரமமாக உருவாகத் தேவையான அனைத்து அத்தியாவசிய வசதிகளையும் உள்ளடக்கிய ஒரு பெருந்திட்டத்தை உருவாக்க நாங்கள் தற்போது கட்டிடக் கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். எவ்வாறாயினும், திட்டத்தை இறுதி செய்து இந்த வசதிகளின் கட்டுமானத்தை நிறைவு செய்ய சில காலமாகும், மேலும் பல வருட வளர்ச்சியை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
இதற்கிடையில், ஆன்மீக நிகழ்வுகளில் பங்கேற்கும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இந்த தங்குமிடம் இட பற்றாக்குறையை எதிர்கொள்கிறது. இதில் சன்னியாசிகள் மற்றும் சேவகர்களுக்கான அறைகள் மற்றும் வசதிகள் பற்றாக்குறை, பக்தர்களுக்கான குறைந்த எண்ணிக்கையிலான தனிப்பட்ட தங்குமிடங்கள் மற்றும் போதுமான அலுவலக இடம் இல்லாமை ஆகியவை அடங்கும்.
இந்த சவால்களை உடனடியாக எதிர்கொள்ள, வருகையாளர்கள், பக்தர்கள், சேவகர்கள் மற்றும் சன்னியாசிகளின் தேவைகளை சிறப்பாக பூர்த்தி செய்யும் வகையில் தற்போதுள்ள வசதிகளை மேம்படுத்துகிறோம். பிரத்தியேக பயன்பாட்டிற்காக அதிக தங்குமிடங்களை, இணைக்கப்பட்ட குளியலறைகளுடன் விருந்தினர் அறைகளாக மாற்றுவது, ஆண் மற்றும் பெண் பக்தர்களுக்கு கூடுதல் அறைகளைக் கட்டுவது மற்றும் சன்னியாசிகள் மற்றும் சேவகர்கள் தங்குவதற்கும் பணி செய்வதற்கும் தனித்தனி கட்டட தொகுதிகளை நிர்மாணிப்பது, கூடுதல் அலுவலகம் அறை மற்றும் வரவேற்பு கட்டிடம் ஆகியவை இதில் அடங்கும்.
உங்கள் உதவியும் ஆதரவும் வரவேற்கப்படுகிறது
இந்த ஆன்மீக புகலிடம் தொடர்ந்து வளர்ச்சியடைந்து விரிவடைந்து வருவதால், உங்களது ஆதரவை, பிரார்த்தனைகள், தன்னார்வப் பணிகள் மற்றும் சேவா நடவடிக்கைகளில் பங்கேற்பது ஆகிய வழிகளில் கோருகிறோம். உங்கள் தாராளமான பங்களிப்புகள் இந்த ஆசிரமத்தை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கும், இது அனைவருக்கும் ஆன்மீக புத்துணர்ச்சியின் உயிர்துடிப்புள்ள மையமாக மலர உதவும்.
தகவல்கள் குறித்த கேள்விகளுக்கு அல்லது எங்களை தொடர்பு கொள்ள, தயவுசெய்து இங்கே கிளிக் செய்யவும்.
இறைவனும் குருமார்களும் உங்களை ஆசீர்வதித்து எப்போதும் வழிநடத்தட்டும்.