தனது குருவான ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வர்ஜியால் ஊக்குவிக்கப்பட்ட பரமஹம்ஸ யோகானந்தர், இளம் சீடர்களுக்கு அடிப்படைக் கல்வியையும் அளித்து, அவர்களின் ஆன்மீகப் பயிற்சியை முறைப்படுத்தத் தொடங்கினார். காசிம்பஜார் மகாராஜா சர் மணிந்திர சந்திர நந்தியின் உற்சாகமான ஆதரவுடன், மார்ச் 22, 1917 அன்று மேற்கு வங்கத்தின் திஹிகாவில் ஏழு சிறுவர்களுடன் யோகதா சத்சங்க பிரம்மச்சரிய வித்யாலயா நிறுவப்பட்டதன் மூலம் ஒரு முறையான நிறுவனத் தொடக்கம் மேற்கொள்ளப்பட்டது.
ஒரு வருடம் கழித்து, திஹிகா இடம் பற்றாக்குறை ஆகும் அளவிற்கு விரைவாக மிகப் பெரியதாக வளர்ந்த பாடசாலையின் வெற்றியால் ஈர்க்கப்பட்டு, மகாராஜா, ஜார்க்கண்ட், ராஞ்சியில் உள்ள தனது கோடைகால அரண்மனையையும் அதன் 25 ஏக்கர் நிலங்களையும் கருணையுடன் வழங்கினார், 1918 இல் பாடசாலை அங்கு மாற்றப்பட்டது.
1935 ஆம் ஆண்டில் பரமஹம்ஸர் ஒரு வருட கால பயணமாக இந்தியா வந்தபோது, மகாராஜாவின் புதல்வர் ஸ்ரீ ஷிரிஷ் சந்திர நந்தியிடமிருந்து இந்த நிலத்தை வாங்கினார். அமெரிக்காவில் உள்ள அவரது சீடர்களிடமிருந்தும், அவரது தந்தை ஸ்ரீ பகவதி சரண் கோஷிடமிருந்தும், மற்றும் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் அவர் ஆற்றிய சொற்பொழிவுகள் மூலம் கிடைக்கபெற்ற நிதியிலிருந்தும் இதை வாங்குவதற்கான தொகை கிடைத்தது. பரமஹம்ஸரின் அன்புக்குரிய உயர்ந்த சீடரும் YSS/SRF இன் இரண்டாவது தலைவருமான ராஜரிஷி ஜனகானந்தா அவர்கள் தாராளமாக நன்கொடை அளித்தார்.
யோகதா சத்சங்க கிளை மடத்தில் உள்ள பிரதான கட்டிடத்தின் தூணில், ராஞ்சி பாடசாலையை ஒரு உறுதியான அடித்தளத்தில் நிறுவ உதவிய அனைவரின் பெயர்களும் பொறிக்கப்பட்டுள்ளன. யோகானந்தர் தனது தந்தையின் பங்களிப்பைப் பற்றி அரிதாகவே பேசினாலும், அமைப்பை நிறுவுவதில் அவரது உதவி முக்கியமானது.
கட்டிடத்தின் குறிப்பிடத்தக்க புனரமைப்பு 1967 இல் ஸ்வாமி சியாமானந்த கிரியால் மேற்கொள்ளப்பட்டது. 1979 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், ஒரு கான்கிரீட் கூரை கட்டப்பட்டது மற்றும் கட்டிடத்தை புதிப்பிக்கவும், எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாக்கவும் தேவையான பழுதுபார்ப்புகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் சாய்வான கூரையுடன் கூடிய கட்டிடத்தின் அசல் கட்டடக்கலை வடிவமைப்பு தக்கவைக்கப்பட்டது, அத்துடன் பண்டைய மர விட்டங்களை இன்றும் காணலாம்.
ஆரம்ப ஆண்டுகளில் பாடசாலையின் தொடக்கம் மற்றும் வளர்ச்சி
ஆரம்ப ஆண்டுகளில், இந்த கட்டிடத்தில் நூறு மாணவர்கள் தங்கி படிக்கும் வசதி கொண்ட ஆண்கள் பாடசாலை இருந்தது. மாணவர்களின் உடல், மனம் மற்றும் ஆன்மாவின் முழுமையான வளர்ச்சிக்கு உதவும் வகையில் பாடசாலையின் கல்வித் திட்டத்தை பரமஹம்ஸ யோகானந்தர் வடிவமைத்தார். விவசாயம், தொழில்துறை, வணிகம் மற்றும் கல்வியியல் பாடங்கள் இதில் அடங்கும். காலங்காலமாக போற்றப்படும் ரிஷிகளின் கல்வி கொள்கைகளைப் பின்பற்றி, பரமஹம்ஸர் பெரும்பாலான வகுப்புகளை வெளியில் நடத்த ஏற்பாடு செய்தார்.
ராஞ்சியின் தனித்துவமான அம்சம், சீடர்கள் கிரியா யோக உபதேசம் பெறுவதே ஆகும். தவறாது செய்யும் ஆன்மீக பயிற்சிகள், கீதை ஸ்லோகங்கள் பாராயணம், எளிமை, தியாகம், மரியாதை, உண்மை ஆகிய நற்பண்புகளின் போதனைகள் அன்றாட திட்டப் பட்டியலின் ஒருங்கிணைந்த பகுதியாகும்.
தனது நிர்வாக மற்றும் கற்பித்தல் பொறுப்புகளுக்கும் அதிகமாக, மாணவர்களுக்கு பெற்றோராகவும் பங்காற்றினார் பரமஹம்ஸர். யோகதா சத்சங்க பிரம்மச்சர்யா வித்யாலயாவின் மாணவரான ஸ்ரீ எஸ். கே. டி. பானர்ஜி, அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு ஏக்கத்துடன் நினைவு கூர்ந்தார்: “பரமஹம்ஸர் எங்களுக்கு ஒரு தந்தையாக இருந்தார், நாங்கள் அவருடைய விசுவாசமிக்க புதல்வர்கள். அவரது தோழமையில் இருப்பதே கூட ஆன்மீகக் கற்றல் தான். பரமஹம்ஸர் தெய்வீக முழுமையின் இலக்கை நோக்கி எங்களை ஊக்கப்படுத்தினார்.”
1920 ஆம் ஆண்டில் மேலை நாடுகளுக்குச் சென்றபோது, பரமஹம்ஸர் குழந்தைகளின் பொறுப்புகளை பாடசாலையின் மற்ற ஆசிரியர்களிடம் ஒப்படைத்தார்.
1968 ஆம் ஆண்டில், YSS உயர்நிலைப் பாடசாலைகளில் சுமார் 1,400 சிறுவர்களும், 400 சிறுமிகளும், அதன் இரண்டு கல்லூரிகளில் சுமார் 800 மாணாக்கர்களும் சேர்க்கப்பட்டனர். அதன் விரைவான விரிவாக்கம் காரணமாக, கல்வி நிறுவனங்களை ஆசிரம வளாகத்திற்கு வெளியே மாற்ற வேண்டியிருந்தது. 1981 ஆம் ஆண்டில், சிறுவர் பாடசாலை மற்றும் கல்லூரி ஆசிரமத்திலிருந்து சுமார் 11 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜெகநாத்பூர் என்ற புதிய இடத்திற்கு மாற்றப்பட்டது. ஆன்மீக அமைப்பின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக பிரதான கட்டிடம் பின்னர் அலுவலக இடமாக பயன்படுத்தப்பட்டது.
பிரதான கட்டிடத்தில் பல சிறிய அறைகள் மற்றும் அரங்குகள் உள்ளன – ஒரு வரவேற்பு மற்றும் புத்தக அறை, மாத்ரி மந்திர், பரமஹம்ஸ யோகானந்தரின் அறை மற்றும் நூற்றாண்டு நிறைவின் புகைப்படக் காட்சி கூடம்.
வரவேற்பு அரங்கம் மற்றும் புத்தக அறை
வெளிப்புற வராண்டா ஒரு பெரிய அரங்கிற்கு அழைத்துச் செல்கிறது, இது பக்தர்கள் மற்றும் ஆசிரமத்திற்கு வரும் பிற பார்வையாளர்களுக்கான வரவேற்பு அலுவலகமாக செயல்படுகிறது. YSS வெளியீடுகள் அனைத்தும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன, மேலும் ஒரு புத்தக விற்பனை கவுண்டரும் இங்கு அமைந்துள்ளது.
மாத்ரி மந்திர்
மாத்ரி மந்திர் என்பது வராண்டாவின் இடதுபுறத்தில் உள்ள தரை விரிப்புடன் கூடிய பெரிய அரங்கம். YSS/SRF இன் மூன்றாவது தலைவர் மற்றும் சங்கமாதா ஸ்ரீ ஸ்ரீ தயா மாதாவின் நினைவாக இந்த அரங்கம் அதன் புனிதமான பெயரைப் பெற்றது. ஒரு சமயம் ஸ்ரீ தயா மாதாஜி ஒரு இருக்கை மீது அமர்ந்து சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்த போது ‘சமாதி’ நிலைக்குச் சென்றார். இந்த அரங்கில் வைக்கப்பட்டுள்ள அவரது படங்களும், இரண்டு இருக்கைகளும் ‘மா’வுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மட்டுமல்லாமல், குரு வழங்கிய பயிற்சிகளை தவறாமலும் நேர்மையாகவும் கடைப்பிடிப்பதன் மூலம் அடையக்கூடிய ஆன்மீக உயரங்களை அனைத்து யோகதன்களுக்கும் நினைவூட்டுவதாக இருக்கின்றன. இந்த அரங்கம் இப்போது தியானம், ஆலோசனை மற்றும் வகுப்புகள் நடத்துவதற்கு பயன்படுத்தப்படுகிறது.
பரமஹம்ஸ யோகானந்தரின் அறை
மகா குரு ராஞ்சியில் (1918 முதல் 1920 வரை) தங்கியிருந்த அறை ஒரு ஆலயமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரங்களில் தனிப்பட்ட தியானத்திற்காக இது அனைவருக்கும் திறந்து வைக்கப்படுகிறது. இங்கு தியானம் செய்யும் போது பக்தர்கள் மிகுந்த மன எழுச்சியை உணர்கின்றனர். யோகானந்தர் பயன்படுத்திய மரக் கட்டில் தவிர, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்ஜலீஸில் உள்ள SRF சர்வதேச தலைமையகத்திலிருந்து கொண்டுவரப்பட்ட குருவின் கை மற்றும் கால் பதிவுகள் இந்த அறையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
பிரார்த்தனைகள் தேவைப்படும் அன்புக்குரியவர்களின் பெயர்கள் கட்டிலில் வைக்கப்பட்டுள்ள பிரார்த்தனை பெட்டியில் வைக்கலாம். குருதேவர் தனது காலத்தில் தொடங்கிய உலகளாவிய பிரார்த்தனை குழுவின் ஒரு பகுதியாக, உலகெங்கிலும் உள்ள YSS சன்னியாசிகள் மற்றும் பக்தர்கள் ஒவ்வொரு நாளும் பிரார்த்தனை கோரும் அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்கிறார்கள்.
மேலும், குருவின் தனிப்பட்ட உடைமைகள் சில இந்த அறைக்கு வெளியே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
யோகானந்தரின் தனிப்பட்ட பொருட்களின் காட்சி
யோகானந்தரின் மகாசமாதிக்குப் பிறகு அவரது உடலில் வைக்கப்பட்டிருந்த ரோஜா மலர் உட்பட அவரது தனிப்பட்ட உடமைகள் சில இந்த அறைக்கு வெளியே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஒரு குடை, ஒரு துறவற அங்கி மற்றும் அவர் பயன்படுத்திய காலுறை மற்றும் அவர் சாப்பிட்ட “லுச்சி” யின் துண்டு ஆகியவை மற்ற நினைவுச்சின்னங்களில் சில.
புகைப்படக் கண்காட்சி
வரவேற்பு அரங்கின் முன் ஒரு புகைப்படக் கண்காட்சி உள்ளது. 1917 முதல் 2016 வரையிலான யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா வின் நூறு ஆண்டுகால பயணத்தை சித்தரிக்கும் ஒரு ஓவிய வரலாறு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.