தியான தோட்டம் – யோகதா சத்சங்க கிளை மடம், ராஞ்சி

மெளனத்தின்‌ நுழை வாயிலின்‌ ஊடாக ஞானம் மற்றும்‌ அமைதியின் குணப்படுத்தும்‌ சூரியன்‌ உங்கள்‌ மேல்‌ பிரகாசிப்பான்‌.

பரமஹம்ஸ யோகானந்தர்

ஆசிரம மைதானத்தில் பலவிதமான செடிகள் மற்றும் மரங்கள் நிறைந்த பல அழகிய இயற்கை தோட்டங்கள் உள்ளன. நிழல் தரும் மாந்தோப்புகள், பலா மரச் சாலைகள், பசுமைமாறா லிச்சி மரங்கள் மற்றும் நேர்த்தியாக பரவியிருக்கும் அலங்கார மூங்கில் திட்டுகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஒரு ஆன்மீக சோலையை உருவாக்குகின்றன, இது உலகியல் வாழ்வில் சோர்வுற்றிருக்கும் ஆன்மாக்களை இங்கு வருகை தந்து அமைதி மற்றும் மகிழ்ச்சியின் அமுதத்தில் பங்கேற்க அழைக்கிறது. இங்கு உலகக் கவலைகளை விட்டுவிட்டு, உடல், மனம் மற்றும் ஆன்மாவில் ஓய்வெடுப்பது ஒருவருக்கு எளிதாக இருக்கிறது. ஒருவர் ஆழ்ந்து தியானம் செய்யவும் அல்லது அமைதியாக உட்கார்ந்து இந்த புனிதமான சூழலின் அமைதியிலும் நிம்மதியிலும் திளைக்க ஏதுவாக பல பெஞ்சுகள் அமைக்கப்பட்டுள்ளன.

பரமஹம்ஸர் மற்றும் இப்புனித இடத்தில் நடமாடியிருக்கும் தெய்வீக உன்னத நபர்கள் விட்டுச் சென்ற ஆன்மீக அதிர்வுகள், அமைதியைத் தேடி அல்லது இறைவனைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்க ஆசிரம வளாகத்திற்குள் நுழையும் அனைவரையும் மேம்படுத்துகிறது.

இந்த புனித தியான தோட்டங்களில், அமைதியாக தியானம் செய்யக்கூடிய பல அமைதி கோபுர குடில்கள், மூலைகள் மற்றும் மாடங்கள் உள்ளன. மலர்கள், புதர்கள் மற்றும் தாவரங்கள் ஒரு இனிமையான சூழலை உருவாக்க கவனமாக வளர்க்கப்பட்டு வருகின்றன. பிரதான கட்டிடம், தியான மந்திர் மற்றும் ஸ்மிருதி மந்திரைச் சுற்றி பரந்த பசுமையான, மரகத பச்சை புல்வெளிகள் உள்ளன. ஒரு சில நீர்நிலைகளில் அரிய வகை அல்லி மற்றும் பல வண்ண மீன்கள் ஏராளமாக உள்ளன. இந்த புனிதமான நிலப்பரப்பில் எதிரொலிக்கும் அமைதி மற்றும் நிம்மதிச் சூழலை இந்த இயற்கை அம்சங்கள் வலுப்படுத்துகின்றன.