கர்ம யோகமும் கிரியா யோகமும்: ஆன்மீக வெற்றிக்கான புற மற்றும் அக செயல்பாட்டுச் சக்தியைப் பயன்படுத்துதல்

பரமஹம்ஸ யோகானந்தரின் ஞான-பரம்பரைச் செல்வத்திலிருந்து சில தேர்வுகள்

யோகம் என்பது முறையாகச் செயல்படும் கலை

யோகம் என்பது அனைத்தையும் இறை உணர்வுடன் செய்கின்ற கலையாகும். நீங்கள் தியானம் செய்யும் போது மட்டுமல்ல, நீங்கள் பணியாற்றிக் கொண்டிருக்கும் போதும் கூட, உங்கள் எண்ணங்கள் அவனிடம் இடைவிடாது நங்கூரமிடப் பட்டிருக்க வேண்டும்.

ஆழ்ந்த தியானத்தில் தினமும் இறைவனுடன் உரையாடுவது, மற்றும் உங்களின் அனைத்துக் கடமைமிகு செயல்களிலும் அவனுடைய அன்பையும் வழிகாட்டுதலையும் எடுத்துச் செல்வதே நிரந்தர அமைதி மற்றும் மகிழ்ச்சிக்கான வழி.

இறைவனை மகிழ்விப்பதற்காக நீங்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறீர்கள் என்ற உணர்வுநிலையுடன் நீங்கள் செயல்பட்டால், அந்தச் செயற்பாடு உங்களை அவருடன் இணைக்கிறது. எனவே தியானத்தில் மட்டுமே இறைவனைக் காண முடியும் என கற்பனை செய்யாதீர்கள். பகவத் கீதை போதிப்பதைப் போல தியானம் மற்றும் சரியான செயற்பாடு இரண்டும் அவசியம். இந்த உலகத்தில் நீங்கள் உங்கள் கடமைகளைச் செய்யும்போது இறைவனை நீங்கள் நினைத்தால், நீங்கள் மனத்தளவில் அவருடன் நீங்கள் இணைந்திருப்பீர்கள்.

இறைவனுடன் ஒன்றிணைந்து பணியாற்றுவது இந்த உலகில் தேர்ச்சி பெறவேண்டிய மிகப்பெரிய கலை. அனைத்துச் செயல்களையும் இறை உணர்வுடன் முன்னெடுத்துச் செல்வது மிக உயர்ந்த யோகமாகும்.

கர்ம யோகம்: ஆன்மீகச் செயற்பாட்டின் பாதை ...

கர்ம யோகத்தின் பாதை தன்னலமற்ற செயற்பாட்டின் மூலம் ஆன்மாவை இறைவனுடன் இணைக்கும் பாதையாகும்.

தியானம் மற்றும் ஆன்மீகப் பணிகளில் ஈடுபடுதல், மற்றும் நீங்கள் செய்யும் அனைத்தும் இறைவனுக்காக என்ற சிந்தனையுடன் வேலை செய்வது—அதுவே கர்ம யோகம். தியானத்தில் நீங்கள் இறைவனின் நித்தியப் பேரின்பத்தை உணரும்போது, நீங்கள் உடலுடன் பிணைக்கப்பட்டிருப்பதை ஒரு போதும் உணர மாட்டீர்கள், மேலும் அவனுக்காகப் பணியாற்ற நீங்கள் உற்சாகத்தால் நிரப்பப்படுவீர்கள். நீங்கள் இறைவனை நேசிப்பவராகவும் அதே சமயம் சோம்பேறியாகவும் இருக்க முடியாது. தியானம் செய்து இறைவனை நேசிப்பவர் அவனுக்காகவும் மற்றவர்களுக்காகவும் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார்.

…பலனுக்கான சுயநலப் பற்றின்றி
உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் ஆன பொருள்சார் நன்மைகளுக்காக பணம் சம்பாதிப்பதில் மட்டுமே உங்கள் செயற்பாடு மையம் கொள்ளும்போது, அல்லது சுயநலத்துடன் எந்தச் செயலிலும் கவனம் செலுத்தும்போது, நீங்கள் இறைவனிடமிருந்து விலகிச் செல்கிறீர்கள். இவ்வாறு பெரும்பாலான மக்கள் தங்கள் பற்றுகள் மற்றும் மேலும் மேலும் பொருள் கையகப்படுத்தல்களுக்கான ஆசைகளில் தங்கள் ஆற்றல்களை ஈடுபடுத்துகிறார்கள். ஆனால் உங்கள் இயக்கசக்தி இறைவனை நாட பயன்படுத்தப்பட்டவுடன், நீங்கள் அவனை நோக்கி நகர்கிறீர்கள்.

…ஆனால் மனசாட்சி மற்றும் உற்சாகத்துடன்
தன் கடமைகளை தாறுமாறாகவோ அல்லது கவனக்குறைவாகவோ அல்லது ஆர்வமின்றி தியானம் செய்பவரால் இறைவனை மகிழ்விக்கவோ அல்லது ஆன்ம அனுபூதியைப் பெறவோ முடியாது. எந்தவொரு செயலும்—உடல், மன அல்லது ஆன்மீக—தெய்வீக ஐக்கியத்திற்கான விருப்பமே அதன் பலனாகக் கொண்டு செய்யப்படுமாயின், அது “சுயநல” செயல் அல்ல. மாறாக, அது படைப்பில் தெய்வீக நோக்கத்தை நிறைவேற்றுகிறது என்ற அர்த்தத்தில் ஒரு முழுநிறைவான செயல்.

கிரியா யோகம்: மிக உயர்ந்த செயற்பாட்டுப் பாதை

ஆழ்ந்த தியானம் என்பது தீவிரமான மனச் செயற்பாடு—மிக உயர்ந்த செயற்பாட்டு வடிவம். கிரியா யோக தெய்வீக விஞ்ஞானத்தின் மூலம், முன்னேறிய யோகியினால் புலன் உணர்வுகளிலிருந்து தனது மனத்தை விலக்கிக் கொள்ளவும், அவைகளின் நுட்பமான சூட்சும சக்திகளை ஆன்மாவை விடுவிக்கும் பணியான அகச் செயற்பாடுகளுக்கு வழிநடத்தவும் முடிகிறது. அத்தகைய ஆன்மீக நிபுணர் உண்மையான, இறைவனிடம் ஐக்கியமாகும் செயலை (கர்ம யோகம்) செய்கிறார்.

இதுவே மிக உயர்ந்த கர்மவினையின் அல்லது செயலின் பாதையாகும்.

அக மற்றும் புற செயற்பாடுகள் இரண்டும் அவசியம்

தியானத்தின் பாதையில் எல்லையற்றவனுடனான ஆரம்பக் காதல் பக்தரை ஒருதலைப்பட்சமாக மாற்ற வாய்ப்புள்ளது; அவர் செயற்பாட்டுப் பாதையைக் கைவிட முனைகிறார். இருப்பினும், பேரண்ட விதி, மனிதன் தன் வாழ்க்கையை நடத்திச் செல்வது தொடர்பான அவரது தீர்மானங்களைப் பொருட்படுத்தாமல், அவரைச் செயற்பாட்டிற்கு கட்டாயப்படுத்துகிறது. படைப்பின் ஒரு பகுதியாக இருக்கும் அவருக்கு படைப்பைச் சார்ந்த கடமைகள் உள்ளன.

முன்னேறிய பக்தர்கள் கூட பணியாற்றாவிட்டால் உயரத்திலிருந்து விழுகிறார்கள் என்று எச்சரிக்கும் நிகழ்வுகள் சாத்திரங்களில் நிறைந்திருக்கின்றன….இறுதி விடுதலை அடையும் வரை, செயலற்ற தன்மையானது மனச் சோம்பல், உணர்வுப் பற்று மற்றும் இறை-உணர்வுநிலை இழப்புக்கு வழிவகுக்கிறது.

சமச்சீர் வாழ்க்கை: ஞானஒளி பெறுதலுக்கான உறுதியான பாதை

தியானத்திற்கும் செயற்பாட்டிற்கும் இடையே சமநிலையைப் பராமரிப்பதற்கான கடினமான போராட்டத்தில், மிகப்பெரிய பாதுகாப்பு இறை-உணர்வுநிலையில் உள்ளது.

அகத்தே இறை-உணர்வைத் தக்க வைத்துக் கொண்டே மனிதன் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான கடமைகளை ஆற்ற முடியும் வண்ணம் தனது மனத்தை தொடர்ச்சியான தியானத்தால் பயிற்றுவிக்க வேண்டும். அனைத்து ஆண்களும் பெண்களும் தங்கள் அன்றாட வாழ்க்கை முறையுடன் ஆழமான தியானத்தை இணைத்துக் கொண்டால், தங்கள் உலக வாழ்க்கையை முடிவற்ற உடல் மற்றும் மன நோய்களிலிருந்து விடுவித்துக்கொள்ள முடியும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இதைப் பகிர