ஆனந்த -மாதா நினைவுக்குறிப்புகள்

ஆனந்த மாதா(1915–2005)

பரமஹம்ஸ யோகானந்தரின் ஆரம்பகால மற்றும் மிக நெருங்கிய சீடர்களில் ஒருவரும் மறைந்த நம் சங்கத்தலைவி ஶ்ரீ ஶ்ரீ தயாமாதாவின் சகோதரியுமான ஆனந்தமாதா அவர்கள் பிப்ரவரி 6, 2005 அன்று தம் பூத உடலை நீத்தார். மாதாஜி அவர்கள், பரமஹம்ஸருக்கும் அவரது பணிக்கும் அநேக ஆண்டுகள் தேவை புரிந்திருந்தாலும், அவரது பணியின் தன்மை அவரது விருப்பத்திற் கேற்றவாறு ஒரு மேடைப் பேச்சாளராகவோ அல்லது ஆசிரியராகவோ இருந்ததற்கு மாறாக “திரைகளுக்கு பின்னால்” உள்ள ஒன்றாக அமைந்தது. ஆகையால் நாங்கள் இங்கு அவரது சொந்த வார்த்தைகளில் பரமஹம்ஸரைப் பற்றிய நினைவு குறிப்புகளுக்கு மாறாக அவரது வாழ்க்கையைப்பற்றி மற்றவர்களால் கூறப்பட்ட இந்த தகவல் தொகுப்பை சேர்த்துள்ளோம்.

ஆனந்தமாதா உலகளாவிய பணியின் அடித்தளத்தை மேம்படுத்த உதவவும் அத்துடன் அதன் எதிர்கால மலர்ச்சிக்கு அவர் வகுத்த திட்ட விவரணத்தை நிறைவேற்றவும் தானே நேரடியாகப் பயிற்சி அளித்த அரிய சீடர்களுள் ஒருவர் ஆவார். அவர் அக்டோபர் 7, 1915-ல் பிறந்து லூசி விர்ஜீனா ரைட் என்று பெயரிடப்பட்டார். அவர் தம்மை முழுவதுமாக இறைவனின் அன்பு மற்றும் சேவைகள் பரமஹம்ஸரின் போதனைகளை உள்வாங்கி, அதன்படி வாழ்ந்து மற்றும் அவரது புனிதப் பணிக்காக கபடற்று உழைத்ததன் மூலம் அர்ப்பணித்துக்கொண்டார். புராதன துறவு வழிமுறையில் அவர் பரமஹம்சரிடம் இருந்து சன்னியாசதீட்சை பெற்று வாழ்நாள் முழுவதுமான துறவு விரதங்களை மேற்கொண்ட சில ஆரம்பகால சீடர்களில் ஒருவர் ஆவார். பரமஹம்சர் அவரை ஸெல்ஃப் ரியலைசேஷன் ஃபெலோஷிப் / யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா இயக்குனர் குழுவில் உறுப்பினராக நியமித்தார்.

பிப்ரவரி 11, 2005இல் தலைமை மையத்தில் ஸெல்ஃப் ரியலைசேஷன் ஃபெலோஷிப்பின் அனைத்து ஆசிரம மையங்களில் உள்ள சன்னியாசிகள் மற்றும் சன்னியாசினிகள் கலந்து கொண்ட ஒரு நினைவஞ்சலி வழிபாடு நடைபெற்றது. சுவாமி விஸ்வாநந்தா முன்நின்று இறுதிச் சடங்குகளைச் செய்தார்; ஶ்ரீ தாமாதா, மிருணாளினி மாதா, மற்றும் சுவாமி ஆனந்தமாய் ஆகியோர் முக்கியப் பேச்சாளர்களில் அடங்குவர்.பின்வருபவை, அவர்கள், இறைவனுக்கும் குருவுக்கும் நிபந்தனையற்று அர்ப்பணிக்கப்பட்ட ஆனந்த மாதாவின் புனித வாழ்க்கை குறித்து ஆற்றிய புகழுரைகளின் சிறப்புக் கூறுகள் ஆகும்:

சுவாமி ஆனந்தமாய்:
நான் ஒரு நாள் குருதேவருடன், மின்தூக்கியில் இருந்து இறங்கி, நிலவறையில் அவரது காரை நோக்கி நடந்து கொண்டிருந்தோம். ஆனந்தமாதா குருதேவருக்காகக் காத்துக்கொண்டிருந்தார். பொதுவாக மாதாஜிதான் காரை ஓட்டிச் செல்வார். நாங்கள் நடந்து கொண்டிருக்கையில் குருதேவர் என் கையைப் பற்றி, அசையாமல் நின்ற வண்ணம் என்னிடம் கூறினார்,”எப்பொழுதும் நினைவில் கொள், ஃபேயியும் (ஶ்ரீதயா மாதா), விர்ஜினியாவும் (ஶ்ரீ ஆனந்தமாதா) ஒரு நூறு சதவிகிதபக்தி, ஒரு நூறு சதவிகித கீழ்ப்படிதல், ஒரு நூறு சதவிகித விசுவாசத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களை நீ பின்பற்ற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.” அவர் இதைக் கூறும்போது, தான் கூறுவதை வலியுறுத்துவதற்காக என் கையை சற்று அழுத்தினார். இது நான் ஆசிரமத்திற்கு வந்த புதிதில் நடந்தது.

ஒரு சில வருடங்களுக்குப் பிறகு குருதேவர் கிட்டத்தட்ட அதே வார்த்தைகளையே மீண்டும் என்னிடம் கூறினார். இந்த சமயத்தில், குருதேவர், அவரது பணி மற்றும் அவரது ஆன்மீக வாழ்க்கையைப் பற்றி சற்று அதிகமாகப் புரிந்து வைத்துக் கொண்டிருந்தேன். நான் நினைத்துப் பார்த்தேன். குருதேவரே ஒரு அவதாரம், இறைவனின் ஒரு பிறவி;(அவரிடமிருந்து வந்த) இந்த வார்த்தைகள் மிகவும் எளிதாகத் தோன்றினாலும் இவைதான் ஒரு சீடருக்குக் கிடைக்கும் ஒரு முடிவான புகழுரை. குருதேவர் கூறியதை விட உயர்ந்த புகழுரை இல்லவே இல்லை.”

ஆனந்தமாதாவைப் பற்றி மற்றொரு சிறிய சம்பவம்: இது 1951 ஆம் ஆண்டு காலத்தில் நடந்தது. குருதேவரது குளியல் அறை சுவர்களில் மீண்டும் வர்ணம் அடிக்கும் பணி எனக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. நான் குளியலறையின் வெளிச்சுவர்களில் வர்ணம் அடித்து முடித்துவிட்டு பிறகு வர்ணக் கலவையை இரண்டு வாளிகளில் சுமந்துகொண்டு மூன்றாம் தளத்திற்கு செல்லும் மின்தூக்கியை நோக்கி நடந்தேன்.(மூன்றாம் தளத்தில்) அந்த வாளிகளைச் சுமந்து கொண்டு வராந்தா வழியாக நடந்து கொண்டிருந்தபோது வாளிகள் கனத்தன, வாளிகளின் கைப்பிடிகள் கம்பிகளால் ஆனதால் அது என் கையை அறுத்துக் கொண்டிருந்தன; நானென்கைகளுக்கு ஓய்வு கொடுப்பதற்காக வாளிகளை சில கணங்களுக்கு இறக்கி வைத்தேன். அந்த நேரத்தில் அருகிலிருந்த தொலைபேசி மணி அடித்தது. ஆனந்தமாதா அலுவலக அறையில் இருந்து தொலைபேசி எடுப்பதற்கு வெளியே வந்தார்.

இங்கு ஒன்று சொல்ல வேண்டும். நான் தெய்வீகக் காட்சிகளுக்கோ அல்லது அற்புதமான அனுபவங்களுக்கோ ஆசைப்படுபவன் அல்லன். ஒருபோதும் விருப்பமே இருந்ததில்லை. ஆனால் நான் அன்று ஆனந்தமாதா தொலைபேசியை எடுத்துக் கொண்டிருப்பதைக் கண்டேன். என்னை அதிவியப்பில் ஆழ்த்தும் வகையில், அவரை முற்றிலுமாகச்சுற்றி ஒரு ஒளியைக் கண்டேன்- ஒரு முழு ஒளிக்கோளம். மேலும் மேலும் பிரகாசமாகிக்கொண்டே சென்றது; மனதில் எண்ணினேன் “இங்கு என்ன நடந்து கொண்டிருக்கின்றது?” பிறகு ஆனந்தமாதாவின் உருவம் மாறியதைப் பார்த்தேன். அவர அதி உன்னத எழில்மிகு விண்ணுலக தேவதையாக மாறினார். நான் என்ன பார்த்துக் கொண்டு இருந்தேன் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. ஆனால் அது கணநேரக் காட்சி அல்ல; அத்தெய்வீகக் காட்சி ஏழு நிமிடங்கள் நீடித்தது. பிறகு படிப்படியாக ஒளி மங்கலாகி அந்த விண்ணுலக தேவதை மீண்டும் ஆனந்தமாதாவாக மாறியது; அதன்பின் அவர் தொலைபேசியை வைத்துவிட்டு மீண்டும் அலுவலகத்திற்குள் நுழைந்து விட்டார்.

பல வருடங்கள் கழித்து, பகவான் கிருஷ்ணரைப் பற்றிய கீதைகள் அடங்கிய ஒரு புத்தகத்தைப் படித்தேன். அதில் இறைவன் ஒரு அவதாரமாக பூமியில் பிறவி எடுக்கும்போது, எப்பொழுதும் சில தேவதைகள் அந்த அவதாரத்தோடு உடன்வர தாமாகவே முன் வருகின்றனர் என்று கூறப்பட்டிருந்தது, மேலும் பண்டைய காலத்து உயர் ரிஷிகளும் மகான்களும் கிருஷ்ணரின் தோழர்களாக இருக்கப்பிறவி எடுத்தனர் என்று கூறப்படுகிறது; சிறுவன் கிருஷ்ணன் பிருந்தாவனத்தில் வளரும் போது அவருடன் விளையாடிய கோபிகள் அல்லது இடையர்கள் மத்தியில் அவர்கள் இருந்தனர். தயா மாதா, ஆனந்த மாதா, போன்ற பல குருதேவருடைய சிறந்த சீடர்கள் பூமிக்கு வந்தது அவர்களுடைய சொந்த கர்மவினையைத் தீர்ப்பதற்கு அல்ல மாறாக இறைவனுக்கு, நம் குருதேவரின் தெய்வீக அவதாரத்தின் போது சேவை செய்வே வந்தனர் என்பதில் எனக்கு எந்த ஐயமுமில்லை.

ஆனந்தமாதா அத்துணைப்பல வருடங்கள் விசுவாசத்துடன் சேவை புரிந்தார், ஓய்வில்லாமல் இரவும் பகலும் உழைத்துக்கொண்டு. எங்களில் பெரும்பாலோருக்கு, அவர் சில சமயங்களில் எத்துணை கண்டிப்பாக இருந்தார் என்று தெரியும். ஆனால் அவர்கள் வாழ்க்கையின் இறுதிப்பகுதியில் அவர் நோய்வாய்ப்பட்டு இனிமேலும் சேவை செய்ய முடியாத நிலையில் இருந்த போது, அவரது மனம் ஆசிரமத்தின் பொறுப்புகள், கவலைகள் மற்றும் பிரச்சனைகள் மீது மேற்கொண்டு ஈடுபடாமல் இருந்தபோது, அவரது ஆளுமையின் ஒரு புது அம்சம் வெளிப்பட்டது; மிகவும் இனிமையான, மிகவும் அன்பான ஒன்று. நான் அவரைப் பார்த்த போதெல்லாம் அவர் என்னிடம் வந்து இரு கைகளையும் பற்றிக்கொண்டார் – ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை- வெறுமனே அன்பு, அன்பை மட்டுமே(என் மீது)பரவச் செய்தார்.

சில காலம் கழித்து, தேகரீதியாக அவர் மிக மோசமான நிலையை அடைந்துவிட்டார் என்று கேள்விப்பட்டபோது, அவரிடம் விடை பெற்றுக் கொள்ள அவர்கள் அறைக்கு அழைக்கப்பட்டேன். அவரால் கொஞ்சம் கூட பேச முடியவில்லை. ஆனால் அவர் தன் கண்களாலும் கைகளாலும் பேசினார். அவரின் இரு கைகளையும் தன் கைகளில் எடுத்துக் கொண்டார், பிறகு என்னைப் பரிபூரண- பரிபூரண அன்புடன் உற்று நோக்கினார். அது ஒரு அதி உன்னத அனுபவம். பிறகு அவர் எத்துணை அதிகம் குருதேவரை நேசித்தார் என்பதை கருத்தில் கொண்டு, நான் அவரிடம் கூறினேன்: “குருதேவர் உங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்.” அதற்கு மறுமொழியாக ஒரு பிரம்மாண்டமான அன்பு மற்றும் ஆனந்தம் நிறைந்த அலையை உணர்ந்தேன். “நான் மீண்டும் குருதேவர் உடன் இருக்கப் போகிறேன்!” என்று அவர் தெரிவித்துக்கொண்டு இருந்ததுபோல் நான் என்னை உணர்ந்தேன் என்பதை என்னால் கூறத்தொடங்கவே கூட முடியாது. வெறுமனே திணற வைக்கும் அன்பு மற்றும் ஆனந்தம் மட்டுமே. நான் நினைத்தேன் “என்ன ஒரு அற்புதமான எடுத்துக்காட்டு, இறைவனுக்கும் குருவிற்கும் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஒரு வாழ்நாள் முழுவதுமான சேவைக்குப் பிறகு, இப்பொழுது அது முடிவுக்கு வருகிறது; அவரால் கூற முடியும் ” நான் வீட்டிற்குப் போகிறேன்”. நான் எண்ணினேன்: “நானும் செல்ல விழைகிறேன்!”

எனவே இதுதான், ஆனந்தமாதாவைப் பற்றிய என் நினைவுகள்: இத்தகைய ஒரு உன்னத சீடர், குருவுடன் இருந்து, அவருக்கு சேவை செய்யவே பூமிக்கு வந்த ஒரு தெய்வீக ஆன்மா. நான் உயிருடன் இருக்கும் வரை என் இதயத்தில் நான் சுமந்து செல்ல போகும் நினைவுச் சித்திரம் இதுதான். குருதேவர் கூறியதுபோல் – இறைவனுக்கும் குருவிற்கும் – முழுமையான அர்ப்பணிப்பு மற்றும் அன்பு – இந்த எடுத்துக்காட்டைத்தான் அவர் விட்டுச் சென்றுள்ளார்.

மிருணாளினி மாதா

60 வருடங்களுக்குப் பின்பு கூறிய மா(தயா மாதா) மற்றும் ஆனந்தமா தோழமையில் இருந்திடும் பாக்கியம் பெற்றேன்; குருதேவர், ஆரம்ப நாட்களில் ஃபேயி மற்றும் வர்ஜீனியாவை “ஒரு விதைப்பையில் உள்ள இரண்டு பட்டாணிகள்” என்று அழைப்பது வழக்கம். இந்த இருவரில் ஒருவரை, மற்றொருவர் இல்லாமல் நினைக்க முடியாது.

பேரன்புக்குரிய ஆனந்தமா உடனான என் முதல் அறிமுகம் நான் ஆசிரமத்தில் நுழைவதற்கு முன் நிகழ்ந்தது. குருதேவர் என்னை, நான் இன்னமும் இளையோர் உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போதே வார இறுதி நாட்களில் என்ஸினிடாஸ் ஆசிரமத்திற்கு வருமாறு அழைப்பது வழக்கம். எனது முதல் வருகையின் போது, ஆசிரமம் சனிக்கிழமை சுத்தம் செய்தல் பணியில் உதவி புரிந்து கொண்டு நான் வரவேற்பறையில் உள்ள சிக்கலான வேலைப்பாடுகள் கொண்ட யானை உருவங்கள் பொறிக்கப்பட்ட மேஜையில் தூசி தட்டிக் கொண்டு இருந்தேன். குருதேவர் வராந்தா வழியாக வந்து ஒரு கணம் என்னை கவனித்தவாறு நின்றார். பிறகு அவர் என்னிடம் கூறினார்:”இதை நீ மிகவும் நன்றாக செய்வது அவசியம். விர்ஜீனியா மிகவும் கண்டிப்பானவள்.”

நல்லது, ஞாயிற்றுக்கிழமைகளில் எங்கள் குடும்பம் சாண்டியாகோ ஆசிரம வழிபாடுகளுக்கு குருதேவரின் சொற்பொழிவுகளை கேட்பதற்காக செல்லும் வேளைகள் மூலம் எனக்கு தயாமாவையும் ஆனந்தமாவையும் தெரியும். குருதேவரின் இந்த இரு சீடர்களும் குருதேவர் மேடையின் மீது ஏறி உரையைத் தொடங்கத்தயாராகும் நேரத்தில் படிக்கட்டுகள் வழியாக இறங்கி ஆலயத்தினுள் வருவார்கள். நாங்கள் அவர்களை கவனிப்பது உண்டு; இளம் பக்தைகளில் ஒருவள் இதைக்கூறுவாள், நாங்கள் அனைவரும் அதை ஆமோதிப்போம்; உங்களுக்கு தெரியுமா, அந்தக் படிக்கட்டுகளில் இறங்கி அவர்கள் வரும்போது, அவர்கள் நடப்பதில்லை, பறக்கிறார்கள்”. எங்கள் மனங்களில் குருதேவரை சுற்றியிருந்தவர்கள், சுவாமி ஆனந்தமாய் தெரிவித்ததைப் போல் தேவதைகளாகத் தென்பட்டனர்.

எனவே அவரைப் பற்றி என் மனத்தில் இம்மாதிரியான எண்ணத்துடன், நான் மேஜையை சுத்தம் செய்து கொண்டிருந்ததில் ஒரு தேவதையை மகிழ்விக்கும் எண்ணத்துடன் அதை போதுமான அளவு நன்றாக செய்ய மிகவும் கவனம் செலுத்தினேன்! சொல்லிவைத்தாற்போல் குருதேவர் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் மாதாஜி1 வரவேற்பறைக்குள் வந்தார். நான் எங்கே வேலை செய்து கொண்டு இருந்தேனோ அங்கு நடந்து வந்து சிறிது நேரம் நின்றார். நான் துடைக்கும் துணியை மேஜையில் இருந்த ஒவ்வொரு சிறு வளைவிற்குள்ளேயும் விட்டு எடுத்து என் பணியை நான் செய்துகொண்டு இருந்ததை அவர் கவனித்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு அவர் என் தலையில் தட்டிக் கொடுத்துவிட்டு பிறகு கூறினார் “மிகவும் நல்லது, அன்பே மிகவும் நல்லது!” மகா தேர்வில் நான் வெற்றி பெற்று விட்டேன் என்பதை நான் உணர்ந்தேன்!.

ஆனால் அதுதான் ஆனந்தமா. எதையும் அவர் மிகவும் நுணுக்கமாகப் பார்ப்பவர். ஏனெனில் அவரைப் பொறுத்தவரை அவர் குருவுக்காக செய்யும் ஒவ்வொரு சேவையையும் இறைவனுக்கு செய்யும் வேலயாக நினைத்தார். நான் ஆசிரமத்தில் சேர்ந்த நேரத்தில், அவர் குருதேவர் தங்கும் அறை மற்றும் ஒரு அவதாரம் இந்த உலகில் வாழ்வதற்கும் பணி புரிவதற்கும் தேவையான அனைத்து விஷயங்களுக்கும் பொறுப்பேற்றிருந்தார். இந்தப் பொறுப்புகளை அவர், எவர் கண்ணிலும் படாதவாறு, அமைதியாக மற்றும் மிகவும் முழுமையாக ஏற்றுக் கொண்டார். சில நேரங்களில் விருநதுக்காக சமையல் செய்தார்; இந்தியாவில் இருந்த ஒரு சிறப்பு விருந்தாளி வரும்போது, குருதேவர் அவரை இந்திய இனிப்பானரசகுல்லா தயார் செய்ய வைத்தார்.” இந்தியாவில் கூட எவரும் இவ்வளவு சுவையாக செய்வது இல்லை!” என்று குருதேவர் அடிக்கடி கூறுவார்.

அவருக்கு சேவை செய்தது வாயிலாக அவர் முழு வாழ்க்கையும் குரு-பக்தி (குருவின் மூலம் இறைவனிடம் பக்தி)யாகவே அமைந்தது. குருதேவர் உடலை நீத்த பிறகும் அந்த குருபக்தி நிற்கவில்லை. அவர் (குரு சேவையை) உணர்வுப்பூர்வமாக செய்தாரா அல்லது அது இயல்பாகவே அமைந்ததா என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை, ஏனெனில் குருதேவர் எங்களுக்கு கூறிய வார்த்தைகள் அதை நினைவூட்டுகிறது:” நான் உடலை நீத்த பிறகு, இந்த நிறுவனமே எனது உடலாக இருக்கும். நீங்கள் எனக்கு இதுவரை உதவி புரிந்தவாறு, நான் உயிருடன் இருக்கும்போது இந்த என் உடலுக்கு சேவை செய்தது போல், இந்த நிறுவனத்திற்கு சேவை செய்யுங்கள்.” சிறிதுகூட பிறழாமல், ஆனந்தமாதா சேவை செய்வதைத் தொடர்ந்தார். அவர் மேலும் மேலும் அதிகமாக நிறுவனத்தின் பல்வேறு துறைகளின் கடமைகளையும் அதே தளராத ஊக்கங்கூடிய அக்கறையுடன் மேற்கொண்டார். குருதேவர் நிறுவனத்தின் பொறுப்புகள் தாமாகவே தோள்களில் விழுந்தபோது, குருதேவருடன் இருந்து ஒத்துழைத்தது போல், ஆனந்தமாதா, சிறிய அல்லது பெரிய விஷயங்கள் என எல்லா விதங்களிலும் உதவி புரியத் தயாராக இருந்தார்.

ஆசிரமத்தின் (செய்யவேண்டிய) பணியில் சில அம்சங்கள் குறித்து அறிக்கையையோ அல்லது ஒரு திட்டக் கருத்துருவையோ, மேற்கொள்ள வேண்டிய அனைத்து காரியங்கள் தொடர்பான குறிப்புகளையும் நீங்கள் முற்றிலும் கவனமாக ஆராய்ந்து பட்டியலிட்டு இருப்பதாக நினைத்துக்கொண்டு தயார் செய்யலாம். நீங்கள் அதை ஆனந்தமாதாவின்(அனுமதிக்காக) மேஜைக்கு அனுப்பலாம், ஆனால் அவர்கள் இன்னும் 10 குறிப்புகளை கூடுதலாகச் சேர்ப்பார்! அவரது அர்ப்பணிப்பு அத்தகையது. குருதேவர் எங்களிடம் கூறுவது வழக்கம்,”செய்வன திருந்தச் செய்.” மாதாஜி அதைத் தன் இதயத்தில் பதித்துக் கொண்டார். அவர் செய்த ஒவ்வொரு காரியத்திலும் தனது பொறுப்புகளை நிறைவேற்றும் நிமித்தம் அவர் ஆயிரம் சதவிகிதம் அதில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். குருதேவர் எங்கள் எல்லோருக்கும் இதைப் போதித்தார். மாதாஜி அவர்கள் அதில் தன்னிகரற்று விளங்கினார்.

மாதாஜி அதே கவனத்தை, எடுத்துக்காட்டாக, பணியை தொடங்கிய இறைவனின் இந்த கட்டிடங்கள், இந்த வீடுகள் அனைத்தையும் நல்ல முறையில் பாதுகாப்பதற்குப் பயன்படுத்தினார். மவுண்ட் வாஷிங்டன், என்ஸினிடாஸ் ஆசிரமம், ஹாலிவுட் ஆஸ்ரமம், ஏரிக்கோயில் இவையாவும் மிக அழகாக பராமரிக்கப்படுகிறது என்றால், இவற்றின் பாதுகாப்பு நடவடிக்கைகள் மாதாஜியின் மேற்பார்வையில் இருந்ததனால் தான். “இவை அழகான கட்டிடங்கள், அதனால் இவை பாதுகாக்கப்பட வேண்டும்” என்பதனால் மட்டுமல்ல, இவையாவும் குருதேவரின் ஒரு அங்கமாகத் திகழ்ந்தது என்பதால். இந்த அக்கறை, தோட்டத்தில் குருதேவர் நட்டு மற்றும் நேசித்த ஒவ்வொரு புதர்ச்செடி, மரம் யாவற்றுக்கும் பகிரப்பட்டது. மாதாஜி அவற்றை பாதுகாப்பதில் மிகவும் கவனம் செலுத்தினார். அவரது நம்பிக்கை மற்றும் தளராத முயற்சியானது: “அவற்றை இயற்கை வாழ அனுமதிக்கும் வரை நன்றாகப் பாதுகாக்க வேண்டும் ” ஏனென்றால் அவை குருதேவரின் அங்கமாய் இருந்தன.

ஆனந்த மாதா தன் வாழ்க்கையை மிகவும் அதிகமாக பின்னணியிலேயே கழித்தார் என்று பலமுறை கூறப்பட்டுள்ளது. ஆமாம் அவர் மிகவும் அமைதியாக இருந்தார். ஆனால் 1981ல் இந்தியாவில் அநேக நிர்வாக ரீதியான விஷயங்கள் கவனிக்கப்பட வேண்டி இருந்தது. ஶ்ரீ தயாமாதாவினால் இந்தியாவிற்குப் போகமுடியவில்லை. அவர் என்னையும் ஆனந்தமாதாவையும் அனுப்பினார். விஜயத்தின்போது, ஆனந்தமாதா மிகவும் நோய்வாய்ப்படும் படிநேர்ந்தது. ஒய் எஸ் எஸ் நிர்வாகிகள் மிகவும் கவலையுற்றனர். எனவே கல்கத்தாவிலுள்ள ஒரு மருத்துவமனையில் அவர் சில நாட்கள் ஓய்வு எடுக்கவும் சில பரிசோதனைகள் செய்யப்படவும் அங்கு அவர் சேர்க்கப்பட தீர்மானம் ஆயிற்று. ஆனால் நாங்கள், மாதாஜிக்குத் தனிமையும் ஓய்வும் கிடைப்பதற்காக அதைப் பற்றி மௌனம் காத்தோம்.

ஒவ்வொரு நாளும் ஆசிரமத்தில் சத்சங்கங்கள் மற்றும் நிர்வாகக் கூட்டங்களுக்குப் பிறகு நான் மருத்துவமனைக்கு மாதாஜியைப் பார்க்கச் செல்வேன். ஒரு நாள், மிகவும் நெருங்கிய அன்பு வைத்த உறுப்பினர்கள் மாதாஜி இருக்குமிடத்தைக் கண்டுபிடித்து விட்டனர். நான் அவர் அறையில் நுழைந்தபோது, அவரது படுக்கையைச் சுற்றி பக்தர்களின் முழு குழுவே இருந்தது. அங்கு அவர் நேராக அமர்ந்து கொண்டு அவர்களுக்கு மிகவும் அழகிய சத்சங்கம் அருளிக் கொண்டிருந்தார்! தங்களது ஆன்மீக பிரச்சனைகள் குறித்து அவரது அறிவுரையையும் உதவியையும் அவர்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அவர், மிக அற்புதமான அறிவுரையை அவர்களுக்கு வழங்கிக் கொண்டிருந்தார். நான் கதவருகிலேயே நின்று கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் அதைக் கேட்டுக் கொண்டிருந்தேன். அது பார்க்க மிகவும் இனிமையாக இருந்தது; நான் எனக்குள் கூறிக் கொண்டேன்” அவருள் இருக்கும் இத்தகைய மிகுந்த ஞானம், இத்தகைய மிகுந்த அன்பு – எல்லாவற்றையும் அவர் வெளியே பொழிந்து கொண்டிருக்கிறார்!” பின்னர் நான் கூறினேன்:” ஆனந்தமா அவர்களே, நீங்கள் சில சத்சங்கங்கள் எடுத்து உதவி புரியலாம்”. நல்லது, அது ஒருபோதும் நிகழவில்லை. ஆனால் எத்தனை மிகுதியான ஞானம் புதைந்திருந்ததென்று கண்டேன் – அவை அனைத்தையும் அவர் குருதேவர் மற்றும் தெய்வீக அன்னையிடம் வைத்த அன்பினால் சேர்த்தது. அவர் இந்தப் பிறவியில் கொடுத்திருந்த ஒரே சத்சங்கம் அதுவாகத்தான் இருந்திருக்கும்!

இந்த உலகத்தில் நன்றாக வாழப்பட்ட ஒரு வாழ்க்கை நம் அனைவருக்கும் ஏதோ ஒன்றைத் தருகிறது; குருபக்தியின் எடுத்துக்காட்டாக நம் அன்பிற்குரிய ஆனந்தமாதாவால் வாழ்ந்து முடிக்கப்பட்ட வாழ்க்கைக்கு இது நிச்சயமாக முற்றிலும் பொருந்தும். அவர் என்னவாக இருக்கிறார் என்பதை கௌரவப்படுத்த – அவர் என்னவாக இருந்தார் என்று இல்லாமல் அவர் என்னவாக இருக்கிறார் என்பதே சரி, ஏனெனில் அவர் என்றுமே குருதேவரது பணியின்- ஒருங்கிணைந்த பகுதியாகவே இருந்தார். நாம் அதை நினைவில் கொண்டு அவரது எடுத்துக்காட்டைப் பயன்படுத்த வேண்டும்: குருதேவரது பணிக்காக தன்னலமற்ற சேவை வாயிலாக அந்த குருபக்தியானது மிக உயர்ந்த வடிவில் அளிக்கப்பட்டுள்ளது. (குருதேவர் பணிக்காக) அவர் அளித்த கால நேரங்கள் மற்றும் சக்தியில் அவர் ஒருபோதும் சிக்கனம் காட்டியதில்லை என்பதற்கான பல நிகழ்வுகளை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள்.
(ஆனால்) ஒரு பொறுப்பு அல்லது பிரச்சனை அல்லது கடமை எவ்வளவு சிறியது அல்லது பெரியது என்பது ஒரு பொருட்டல்ல, ஆனால் அவை அனைத்தும் குருவுடனும் இறைவனுடனும் நாம் தொடர்பு படுத்தப் படவேண்டும் – இம்முறையில் தான் ஆனந்தமாதா தன் வாழ்க்கையை வாழ்ந்தார். அவர் நிர்வாக ரீதியான கடமைகளில் ஈடுபட்டிருக்கும் போதோ அல்லது அமைதியாக குருதேவரது காரை, அவர் ஆலயத்தில் சமய உரையாற்ற செல்வதற்குமுன் தண்ணீரால் கழுவி சுத்தம் செய்வதற்கு எடுத்துச் செல்லும் போதோ எப்பொழுதுமே அதே அர்ப்பணிப்புடனும் அதே கவனத்துடன் அவை நிறைவேற்றப்பட்டன.

நாம் ஒவ்வொருவரும் அவரது ஸ்தூல முன்னிலையின் இழப்புணர்ச்சியை நம் தனிப்பட்ட வழியில் உணரலாம். அவர் எனக்கு ஒரு சகோதரியாக, குருதேவரின் திருப்பாதங்களில் அமர்ந்திருந்த ஒரு மாண்புமிக்க சீடராக, ஒரு ஆன்மீக வழிகாட்டியாக மற்றும் ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தார். நான் அறிந்தவாறு இந்தப் பிறவியில் மட்டுமே இடம்பெறத் தொடங்காத ஒருவிதத்தில் அவர் என் இதயத்திலும் ஆன்மாவிலும் என்றுமே ஒரு இடத்தைப் பெற்றிருப்பார். குருதேவர், அவரைச் சுற்றியிருந்த எங்களிடம் நாங்கள் கடந்த பிறவிகளில் அவருடன் பல தடவைகள் ஒன்று சேர்ந்து இருந்துள்ளோம் என்று கூறினார். எனவே அந்த பந்தம் இருக்கிறது, மரணம் அதைத் துண்டிக்க முடியாது – அது உங்கள் அனைவரிடமிருந்தும் துண்டிக்கப்பட முடியாது. நீங்கள் நன்றாக சேவை புரியும் போது, அதுவும் ஒரு எடுத்துக்காட்டான வழியில் அதைப் புரியும்போது, ஆனந்த மாதா, தயா மாதா, “இறைவன் எனக்கு தேவதைகளை அனுப்பியுள்ளான்” என்று குருதேவர் குறிப்பிட்ட மற்ற சீடர்கள் இருப்பதைப் போல் நீங்கள் குருதேவரின் தேவதைகளாக உள்ளீர்கள் என்பதை எப்போதும் அறிவீர்கள். அப்பொழுது குருதேவர் நம் ஒவ்வொருவரையும் பார்த்துக் கூறுவார்:”இப்பொழுது நீங்கள் அனைவரும் தேவதைகள் போல் நடந்து கொள்ள வேண்டும்.”

இறைவன் மற்றும் குருதேவர் மற்றும் அனைவருடனும் ஆன தெய்வீக நட்புரிமைப் பார்வையில் மிகவும் நெருங்கியதாகவும் மிகவும் உன்னதமாகவும் உள்ள ஒரு ஆன்மாவைப் பற்றி, அன்பும் பாராட்டும் கலந்த ஒரு சிறு வார்த்தையை உதிர்ப்பது கூட ஒரு பெருமை என்று நான் உணர்கிறேன். ஜெய் குரு!

ஶ்ரீ தயா மாதா:

அன்பிற்குரியவர்களே, எனது மனம், எங்கள் அன்னையின் அரவணைப்பில் இருந்த ஆரம்பகால நாட்களுக்கு பல வருடங்கள் பின்னோக்கிப் பயணிக்கிறது. ஆனந்தமாவும் நானும் சுமார் எட்டு-ஒன்பது வருடங்கள் ஒன்றாக இருந்தோம். நான் அவரைவிட சற்றுப் பெரியவள் – அந்தக் குழந்தை, நாங்கள் பள்ளிக்குச் செல்லும்போது எப்பொழுதும் என் கரத்தைப் பிடித்துக் கொள்ளும், எப்பொழுதும் தயாமாதாவின் காலடிகளைப் பின்பற்றியே வந்தது.

அவை (என் காலடிகள்) அவரை இங்கு கூடக்கொணரும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. நாங்கள் முதன்முதலாக குருதேவரின் உரையை சால்ட் லேக் நகரத்தில் ஒரு பெரிய அவையினருக்கு ஆற்றும்போது கேட்டோம். குருதேவரது சொற்பொழிவுக்கு எங்களது அன்னையால் கொண்டு செல்லப்பட்டோம், நாங்கள் அந்த பிரம்மாண்டமான அரங்கின் முகப்பில் நின்றுகொண்டு குருதேவர் தூரத்தில் நிற்பதைப் பார்த்த போது, நாங்கள் ஒவ்வொருவரும் எங்கள் ஆன்மாக்களில் ஒரு ஆழ்ந்த கிளர்ச்சியை உணர்ந்தோம். அதற்கு சில மாதங்களுக்குப் பிறகு மவுண்ட் வாஷிங்டனில் சேரும் வாய்ப்பு கிடைத்தது. எனக்கு அப்பொழுது பதினேழு வயது. என் இதயத்தில் அப்போது இருந்த அமைதியையும் ஆனந்தத்தையும் என்னால் மறக்க முடியாது. அந்த சமயத்தில் ஆனந்தமாவிற்கு வயது பதினந்து தான், இருப்பினும் அவர் என்னைப் பின்பற்ற ஏங்கினார். 1933-ல் அவரும் கூட, என் அன்புக்குரிய சகோதரர் ரிச்சர்ட் சேர்ந்தது போல் ஆசிரமத்தில் சேர்ந்தார். .2 வருடங்கள் செல்லச் செல்ல குருதேவர் அன்னையின் குழந்தைகள் அனைவரையும் தன்னைச்சுற்றி சேர்த்துக் கொண்டார்: டிக், ஆனந்தமா, என் இளைய சகோதரர் மற்றும் நான். அத்துணை அற்புதமான நினைவுகள்! அந்த நாட்களெல்லாம் இன்பகரமான நாட்கள், ஏனெனில் குருதேவர் எங்கள் முன்வைத்த எடுத்துக்காட்டினால் நாங்கள் மிகவும் எழுச்சியூட்டப்பட்டோம்.

குருதேவரது ஒழுங்கு மிகவும் கடுமையாக இருந்தது. ஆனால் ஆனந்தமா அதை மிகவும் சிரத்தையுடன் அவரது முழு இதயத்துடன் பின்பற்றினார். நான் தலைவியான பிறகு ஆனந்தமா தான் இத்தனை வருடங்களாக என் எல்லா கடமைகளிலும் எனக்கு உதவினார். நான் ஐரோப்பா, இந்தியா, மெக்சிகோ, ஜப்பான் மற்றும் பல நாடுகள் முழுவதுமாக பயணம் செய்தபோது அவர் எனக்கு உதவி புரிய என்னுடன் இருந்தார். அந்த அன்பினை மதித்துப் போற்றுகிறேன்; அவரது நட்பை மதித்து போற்றுகிறேன்.

அவரது நாட்குறிப்பேட்டில் இருந்து ஒரு சிந்தனையை உங்களுக்குப் படித்துக் காட்டுகிறேன்: அவர் எழுதினார்,” 1950, ஏப்ரல் 11ஆம் தேதி உண்மையிலேயே ஒரு ஆச்சரியம்! குருதேவர் அன்று மாலை, இயக்குனர்கள் குழுவில் சேவை செய்ய என்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்று கூறினார். நான் அவரிடம், அந்த கவுரவத்தை ஒருபோதும் எதிர்பார்த்ததில்லை. ஏனென்றால் ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டும் சேவை செய்யலாம் என்று எனக்கு தெரிகிறது, அந்த வகையில் ஃபேயிதான் தர்க்க ரீதியாகவும் பொருத்தமானவர் என்று கூறினேன். ஆனால் அவர், நான் குழுவில் இல்லாதது தனக்கு சரியாகப்படவில்லை என்று கூறினார். ராஜரிஷி உடனான கூட்டத்தின்போது அவர் என்னை நியமித்தார்….. நான் தேர்ந்தெடுக்கப்பட்டது மிகுந்த கவுரமாக நினைக்கிறேன், ஆனால் நான் இந்த புகழால் களிப்புறப்போவதில்லை. இவ்விஷயங்களெல்லாம் உண்மையில் எனக்கு ஒரு பொருட்டே இல்லை.

“குருதேவர் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கி உள்ளார். அநேக அற்புதமான உண்மைகள் அவர் மூலம் வெளிப்படுத்தப்படுகின்றன: இந்த இறைவனின் கனவில் நாம் வாழ்க்கையைப் பற்றியஏன்மற்றும் எதன் காரணமாக நாம் அனைவரும் இங்கு வாழ வந்துள்ள வாழ்க்கை, இறைத்தேடுதல் மற்றும் ஏன் இறைவன் நம்மைப்படைத்தான் என்பதை எல்லாம் குறித்து அவர் மிகவும் தெளிவாக தன் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்”

சில நாட்கள் கழித்து அவர் (ஆனந்தமா) எழுதுகிறார்:” குருதேவர் சில சீடர்களிடம் பேசிக் கொண்டிருந்தார், தன் உரையாடலின் மத்தியில் அவர் கூறினார்: உங்கள் ஒவ்வொருவர் வாழ்க்கையையும் நான் அனுபவிக்கிறேன். மகான்கள் எப்பொழுதும் கூறினார்கள், பக்தி தான் இறைவனை முதலில் ஈர்க்கிறது. எப்பொழுதும் பக்தி செய்பவர்களையே நாடுங்கள்.” நான் பக்தி செய்பவர்களுள் ஒருத்தி, நான் இறைவனை பக்தி வாயிலாக நாடுகிறேன் ” இந்த சிந்தனைகள் எவ்வாறு ஆனந்தமா தன்வாழ்க்கையை நடத்தினார் என்பதை மிகத் தெளிவாகக் காட்டுகிறது.

இது எனக்கு ஒரு புனித நாள், ஒரு சோகமான நாளும் கூட, ஏனெனில் அந்த 89 வருட என் அன்பான மிக அன்பான சகோதரி மற்றும் தோழியை இழந்தவளாவேன்; ஆனாலும் நான் சமாளிப்பேன். நான் ஓய்ந்து விட மாட்டேன். நீங்கள் அவரைப் பற்றி பேசிய விதத்தை எல்லாம் கேட்டு நான் மிகவும் நெகிழ்ந்து போகிறேன். நீங்கள் என் கண்களில் கண்ணீரை வரவழைத்து விட்டீர்கள். இறைவன் உங்கள் ஒவ்வொருவரையும் ஆசிர்வதிக்கட்டும். நான் உங்களிடமெல்லாம் கேட்டுக்கொள்வது ஒன்றுதான்: இந்த நிகழ்வு நம்மை மாற்றட்டும். புனிதர்களின் வாழ்க்கை எடுத்துக்காட்டுகள் நம்மை மாற்றுவதற்காக வந்துள்ளன; வேறு ஒருவரை அல்ல. உங்களைக் கேட்டுக் கொள்ளுங்கள்; நான் நேசிக்கிறேனா? நான் கனிவாக உள்ளேனா? நான் அமைதி நிறைந்தவனாக உள்ளேனா? நான் கருணையையும் அன்பையும் பரப்புகிறேனா? இதைத்தான் நமக்கு முன்னால் சென்றுள்ளவர்கள் – ராஜரிஷி, ஞானமாதா, துர்கா மா, டாக்டர் லூயிஸ் மற்றும் பலர் – போதித்துள்ளார்கள் – இப்பொழுது நம் அன்புக்குரிய ஆனந்தமா மனதில் எந்த சிறுமையும் இல்லை – எப்பொழுதுமே நினைத்துக் கொண்டிருந்தது” சேவை புரிய நான் என்ன செய்யமுடியும்?” மாதாஜி அறிந்த மிக உயர்ந்த ஆனந்தம் – நம் அனைவரும் அறிந்த மிக உயர்ந்த ஆனந்தம் – தன்னலமின்றி சேவை செய்து கொண்டிருப்பதே – நான், நான், நான் என்ற சிந்தனையின்றி குருதேவர் கூறியதுபோல்” இந்த ‘நான்’ இறந்தால் அப்பொழுது நான் யாரென்று நான் அறிவேன்! அவ்வாறுதான் மாதாஜி இருந்தார். அவர் தன்னைப் பற்றி முதலாவதாக நினைத்ததே இல்லை. எப்பொழுதுமே குருதேவருக்கு சேவை புரிவது, அவர் பணியில் சேவை செய்து கொண்டு எல்லாவற்றையும் பராமரிப்பது; மேலும் அவரது இனிமையான அன்பான வழியில் தனது சகோதரி தயா மாதாவிற்கு சேவை புரிவது.

அவரைப் பற்றிய அழகிய புகழ் மிக்க நன்றி. இறைவன் உங்கள் அனைவரையும் ஆசிர்வதிக்கட்டும்.

1பரமஹம்ஸர் தனது வாழ்நாள் காலத்தில், அடிக்கடி ஆனந்தமாதாவை “மாதாஜி” என்று குறிப்பிடுவார் – சம்ஸ்கிருதத்தில் இதற்கு “மாண்புமிகு அன்னை” என்று பொருள்.

2பரமஹம்ஸ யோகானந்தரின் உதவியாளராக 1935-36ல் அவரது இந்திய பயணத்தின் போது சேவை புரிந்த சி.ரிச்சர்ட் ரைட், ஒரு யோகியின் சுய சரிதத்தில் விவரித்துள்ளது போல்.

இதைப் பகிர